Sunday, 20 December 2015

பனங்கிழங்கு

குக்கிராமமும் அற்ற
பெருநகரமும் அற்ற
ஓர் நடுத்தர நகரத்தில் 
பள்ளி பயின்று

கிராமமா
குக்கிராமமா
எனத் தெரியாத
ஓர் புதுவெளியில்
கல்லூரி சென்று

ஓர் பெருநகரத்தின் அடுக்குமாடியில்
அக்கடாவெனக் குடியேறி
தன்னை சாப்ட்வேர் எஞ்சினியராய்
அழைத்துக் கொள்ளுகிற

அந்த வாலிபனுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்புண்டு
பனங்கிழங்கு இன்னதென்று...

பள்ளியில்
கல்லூரியில்
அலுவலகத்தில்
என
எங்கேனும் எப்போதேனும்
எவரேனும் சொல்லக்
கேட்டிருக்க வாய்ப்புண்டு

பனம்பழத்தைப் புதைத்துவைத்து
வளர்ந்தபின் அகழ்ந்தெடுத்து
உப்பிட்டு வேகவைத்து
எடுத்துவந்து கொடுப்பதற்கு
ஒரு கிராமத்து நண்பன் கிடைக்கச்
சாத்தியம் உண்டு

அதை நீள்வாக்கில் பிளந்துவிட்டு
உள்ளிருக்கும் பீலி பிய்த்து
தலைப்பகுதி சுவைக்கச்சொல்லக்
கேட்டிருக்கும் நாட்களுண்டு

செய்முறை 
உண்ணும் முறை
அவன் சொல்லித்
தெரிந்திருக்க வழிவகை உண்டு.

ஆனால்,
அடுக்குமாடிக் குடியிருப்பில்
அவனோடு குடியேறிய
அவன் ஓய்வு பெற்ற அப்பாவுக்கேனோ
பெயர் சரியாய் புலப்படாதபோது

நடுத்தர வர்க மனிதரெனில்
பொருளாதாரம், கல்வியோடு
வட்டார அறிவும் நடுத்தரம் தான்
என சொல்லாமல் சொல்லிக்கொண்டு

சிறுவயதில்
அந்த நடுத்தர நகரத்தின் வீதியில் 
தள்ளுவண்டி கடையின்
லாந்தர் வெளிச்சத்தில்
கூறு நாலணாவுக்கு வாங்கியதாய்
நினைவென்றார்.

கப்பக்கிழங்கு
கருணைக்கிழங்கு
என்று முணுமுணுத்தார்.

குச்சிக்கிழங்கெனத்
தவறாக ஊகித்தார்.
பிறகு
அதுதானென்று வாதிட்டார்.

போராடிச் சலித்த
சாப்ட்வேர் எஞ்சினியர்
மேதாவித்தனத்தோடு
கூகுளின் துணைநாட
ஒருவழியாய் 
ஒப்புக்கொண்ட மனிதர்
மெல்லமாய்க் கேட்கிறார்
"சரி குச்சிக்கிழங்கெனில்
இன்னதென்று கேள் கூகுளிடம்.."

Thursday, 5 November 2015

உள்ளங்கைச் சிறுவெளியில்...

புகைப்படம் காட்டியும்
குறைந்த விலையென்றும்
இன்றே கடைசியென்று
நித்தமும் சொல்லியும்
பொருள் விற்றுக்கொண்டு
சில கடைகள்

வெள்ளி ஞாயிறுகளில்
அதிக விலைக்கும்
ஏனைய தினங்களில்
அடிமாட்டு விலைக்கும்
பயணச்சீட்டு விற்றுக்கொண்டு
சில கடைகள்

தலைப்புச் செய்தி முதல்
தகாத செய்தி வரை
அனைத்தும் உரைத்துக்கொண்டு
சில நாளிதழ் கடைகள்

பழைய இரும்பு ஈயம் பித்தளை
என எதைக்கொடுத்தாலும்
சலிப்பின்றி விற்றுத்தர
சில கடைகள்

திரைப்படச் சீட்டு வேண்டுமா?
வாடகை வாகனம் வேண்டுமா?
சொந்த வீடு வேண்டுமா?
வாடகைக்கு வேண்டுமா? - என
சில விற்பனைக் கடைகள்

உள்ளங்கைச் சிறுவெளியில்
ஓராயிரம் கடைகளென
வியந்துகொண்டே தொடுதிரையில் இடவலமாய் நகர்ந்திருக்க

ஐந்து ரூபாய் வெற்றிலைக்கு
அம்மா அழைத்தபோது
அனைத்துக் கடைகளையும்
மூடிவிட்டு நகர்கிறேன்
அருகாமைக் கடைக்கு...

Tuesday, 6 October 2015

தண்ணீர் எனப்படுவது யாதெனில்...

தண்ணீர் எனப்படுவது
யாதெனக் கேட்க

குழாயிலிருந்து வருவதெனக்
கூறியது குழந்தை

ஐம்பூதங்களில் ஒன்றென்றான் ஞானி

இரு மூலக்கூறு ஹைட்ரஜன் 
ஒரு மூலக்கூறு ஆக்சிஜன் 
எனக் குழப்பினான் விஞ்ஞானி

காசு கொடுத்தால் 
கொள்கலனில் கிடைப்பது 
என்றான் நகரவாசி

மதுவோடு இணைந்த
மந்திரக் கலவை 
எனப் பிதற்றினான் குடிகாரன்

அடிப்படைத் தேவை என்றான் குடிமகன்

வாக்குறுதிப் பட்டியலில்
தேடினான் அரசியல்வாதி

தன் நிலமகளுக்கான
இயற்கையன்னையின் தாய்ப்பால்
என்றான் விவசாயி

இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது...
தாய்ப்பாலுக்கான
ஒரு குழந்தையின் அழுகுரல்!

முடிவிலி

முடிவிலிப் பிரபஞ்சத்தில் வெளிப்பட்ட
முப்பரிமாணப் புள்ளிகளில் இரண்டு
தங்களுக்குள்  வாதிட்டன..

ஒன்று "அது" இல்லை என்றது
ஒன்று "அது" உண்டு என்றது

துணை சேர்ந்தன
அதனோடு சில புள்ளிகள் ..
இதனோடு சில புள்ளிகள் ..

எண்ணற்ற வினாக்கள்
எண்ணற்ற விடைகள்

முக்கால் நூற்றாண்டு வாதமிட்டு
மூப்பெய்திக் களைத்தபின்,
மீண்டும் முடிவிலிக்குள் சென்று மறைந்தன,
ஆதி இரண்டு புள்ளிகள்...!

அவை விட்டுச் சென்ற 
விடையற்ற வினாக்களுடன்
வாதத்தைத் தொடங்கின
மீதி இருந்த புள்ளிகள்...!

இப்போது துணைக்கு
மேலும் சில புள்ளிகள்,
அதனோடு சில...
இதனோடு சில...

முடிவிலியாய் நீண்டுகொண்டிருக்கின்றன
வினாக்களும்!
விடைகளும்!
சத்தமில்லாமல் பிரபஞ்சமும்...!

"அது" உண்டா இல்லையா...!!!!!?

Monday, 5 October 2015

காலப்புத்தகத்தின் கசங்கிய பக்கங்களிலிருந்து...

கசங்கிய பக்கங்களால் ஆனது
காலப்புத்தகம்!
கிறுக்கல்கள் நிறைந்தவை
அதன் கசங்கிய பக்கங்கள்!

அதன் முதல்பக்கம் 
தேடுதல் வேட்டையில்...
கடைசிப்பக்கம்
விடையில்ல வேட்கையில்...

கிறுக்கல்களூடே கிறுக்கல்களாய்
தன்னிச்சையாகப் பதிவேறுகின்றன
கால ஓட்டத்தின் நிகழ்வும்
புரிந்தும் புரியாத அதன் பொருளும்!
 
பதிவுகளில் சில
வேதப்பொருள் உரைக்கும்!!
மற்றும் சில
விஷப்பொருள் உரைக்கும்!!

சில நேரம் பொருள் நேராகும்!
சில நேரம் பொருள் தலைகீழாகும்!

மறுதலிக்கப்பட்ட நிகழ்வுகள்
மறுபதிவேற்றப்படும்!
சில அடித்தல்களோடும்
திருத்தல்களோடும்!!

அப்பொழுது
சில பொருள் மீண்டும் நேராகும்!
சில பொருள் மீண்டும் தலைகீழாகும்!

எது எதுவாகினும்,
வேதப்பொருள் அனைத்தும்
வலதுகைக் கிறுக்கல்கள்!!
விஷப்பொருள் அனைத்தும்
இடதுகைக் கிறுக்கல்கள்!!

வலதுகைக் கிறுக்கல்களில் தெளிவிருப்பினும்
வேதப்பொருள் அவ்வளவாய் விளங்குவதே இல்லை!

இடதுகைக் கிறுக்கல்கள் நல்லவேளையாய்
கிறுக்கியவனுக்கே விளங்குவதில்லை!

இப்பொழுது கிறுக்கப்படுபவை
வலதுகைக் கிறுக்கல்கள்!!

விளங்கவில்லையோ!!
ஆம்! வேதப்பொருள் அவ்வளவாய் விளங்குவதே இல்லை!

Saturday, 3 October 2015

இனி உங்கள் பாடு!

அன்றாடச் செய்திகளும்
அண்டை உள்ளோர் சொற்களுமே
அறிமுகம் செய்திருந்த
உயிர்க் கொல்லும் புற்றுநோயால்

ஆரம்பக் கல்வி முதல்
ஆண்டாண்டு உடனிருந்து
ஆனந்தம் கொண்டிருந்த
உயிர்த் தோழன் ஆட்கொண்டான்!

என்னுமந்த சேதி கேட்டு
விம்மி விம்மி நீர் வடித்தால்
'நட்பு' என்னும் பெயர் கொண்ட
உணர்வதுவே உயிர்க் கொண்டு

உடனிருந்த தருணங்களில்
ஊமையாய் இருந்துவிட்ட
நம்மிரு கன்னங்களை
காலணியால் பதம் பார்க்கும்!

இனி
புகை மதுவை கண்டிப்பதோ
புதைத்த பின் கண்ணீர் விடுவதோ
உங்கள் பாடு!

கனாக் கண்டேன்



தொலைக்காட்சிப் பெட்டியினுள்
அடங்கிவிட்ட அன்னைகளும்
தொழிற்சாலைக் கூடங்களில்
முடங்கிவிட்ட தந்தைகளும்
கைபேசி, கணினிகளில்
தொலைந்துவிட்ட பிள்ளைகளும்
தாங்களே மீண்டதுபோல்
இன்பக்கனா ஒன்று கண்டேன்!!

அறம் சார்ந்த அரசியலும்
கரம் சேர்ந்த மானுடமும்
மறம்கொண்டு செயலாற்ற
வரம் வாங்கி வந்ததுபோல்
அதிசயக் கனாக்கண்டேன்!!

கால்கடுத்து கழனிகளில்
களைத்துழைக்கும் இளைஞர்களும்
பால் பிடித்து செழித்திருக்கும்
பயிர்வகையும் தானியமும்
நாள் கடந்து சென்றுவிட்ட
பசிப்பிணியில் – நோய்நொடிகள்
தாழ்பணிந்து செல்லுதல் போல்
ஆனந்தக் கனாக்கண்டேன்!!

சாதிமத பேதமதை
மறுதலித்துக் களைத்தெடுத்த
மறுமலர்ச்சி கொண்டதொரு
தலைமுறையின் வெளிப்பாட்டில்
சாமானிய மக்களையும்
தொழில்நுட்பப் புதுவரவு
சென்றடைந்து சேர்ந்ததுபோல்
விசித்திரக் கனாக்கண்டேன்!!

அறம் சார்ந்து
பொருள் ஈட்டி
இன்பம் கொள்ளும் மானுடத்தை
பார் முழுதும் கண்டதுபோல்
பேரின்பக் கனாக்கண்டேன்!!

Friday, 2 October 2015

கதவற்ற வீட்டின் முகவரி


நாசி நுகர்ந்த மறுகணம்
அடிவயிற்றை உள்ளிழுத்து,
பேசிக் கிடந்த வாய்தனை
புறங்கை கொண்டடைக்கச் செய்யும்
காற்றில் கலந்த கந்தகத்தின்
நெடி நிறைந்த துர்மணம் பரப்பும்
சாக்கடைப் பிரதேசத்தின் சந்ததிகள் அவர்கள்!

அழுக்குச் சமவெளியின் அங்கமாய்
மனிதக்கழிவுகள் சகிதமாய்
தார்ச்சாலைக்குத் தாழ்வாய்
அடர் சாம்பல் நிறக் கால்வாய்.

கட்டப்பட்டதன்றி - கால்வாய்தனில்
வெட்டப்பட்ட மரம் கொண்டு
குறுக்கமைத்த மரப்பாலம்.

அதுவே அங்கு வழித்தடம்.
அதன் மறுகரையே இருப்பிடம்.

அது வாடகை இருப்பிடமில்லை
சொந்தமாய் இருக்க வாய்ப்பில்லை
இருப்பிடம் என்பதற்கு
வேறுபொருள் உண்டெனில்
சரி அது அதுவுமில்லை.
'அது' அங்கே இருக்கிறது!
அங்கே அவர்கள் இருக்கிறார்கள்!

அங்கே
உண்ணவும் உறங்கவும்
தைரியமாய் சுவாசிக்கவும்
அநேகமாக
ஐம்புலனும் பழகிவிட்ட
புதுவித தகவமைப்பை
அவர்கள் பெற்றிருக்கக் கூடும்!

அவர்களின் பெயர் தெரியவில்லை!
முகம் நினைவில் இல்லை!
முகவரி அறியவில்லை!
கதவிலக்கம் காண்பதற்கு
கதவுமில்லை!
ஓட்டுக்கும் கூட அங்கு
யாரும் வருவதாய் தோன்றவில்லை!

கைக்குட்டையில் முகம் புதைத்த
என் கற்பனை நீண்டிருக்க,
பேருந்து மெல்லக் கடந்திருக்க,
அந்த இடம் கண்ணில் இருந்து
மறைந்துகொண்டே இருக்கிறது

கடைசி மணித்துளிக் காட்சியாய்...
காரிருளில் உரசிய தீக்குச்சியாய்...
பள்ளிச்சீருடையில் ஒரு சிறுவன்
துள்ளிக்கொண்டு நுழைந்தபோது
அந்தக் கதவற்ற வீட்டின்
முகவரி  அறியவைத்து
பேருந்து அவ்விடத்தைக் கடந்துவிட்டிருந்தது.





குறிப்பு : தினமும் பேருந்தில் அலுவலகம் செல்லும் வழியில் காணும் காட்சியின் தொகுப்பு.

புகைப்படம் : கோவை - ஃபன் மாலில் இருந்து லிங்க் ரோடு செல்லும் வழியில்.