நாசி நுகர்ந்த மறுகணம்
அடிவயிற்றை உள்ளிழுத்து,
பேசிக் கிடந்த வாய்தனை
புறங்கை கொண்டடைக்கச் செய்யும்
காற்றில் கலந்த கந்தகத்தின்
நெடி நிறைந்த துர்மணம் பரப்பும்
சாக்கடைப் பிரதேசத்தின் சந்ததிகள் அவர்கள்!
அழுக்குச் சமவெளியின் அங்கமாய்
மனிதக்கழிவுகள் சகிதமாய்
தார்ச்சாலைக்குத் தாழ்வாய்
அடர் சாம்பல் நிறக் கால்வாய்.
கட்டப்பட்டதன்றி - கால்வாய்தனில்
வெட்டப்பட்ட மரம் கொண்டு
குறுக்கமைத்த மரப்பாலம்.
அதுவே அங்கு வழித்தடம்.
அதன் மறுகரையே இருப்பிடம்.
அது வாடகை இருப்பிடமில்லை
சொந்தமாய் இருக்க வாய்ப்பில்லை
இருப்பிடம் என்பதற்கு
வேறுபொருள் உண்டெனில்
சரி அது அதுவுமில்லை.
'அது' அங்கே இருக்கிறது!
அங்கே அவர்கள் இருக்கிறார்கள்!
அங்கே
உண்ணவும் உறங்கவும்
தைரியமாய் சுவாசிக்கவும்
அநேகமாக
ஐம்புலனும் பழகிவிட்ட
புதுவித தகவமைப்பை
அவர்கள் பெற்றிருக்கக் கூடும்!
அவர்களின் பெயர் தெரியவில்லை!
முகம் நினைவில் இல்லை!
முகவரி அறியவில்லை!
கதவிலக்கம் காண்பதற்கு
கதவுமில்லை!
ஓட்டுக்கும் கூட அங்கு
யாரும் வருவதாய் தோன்றவில்லை!
கைக்குட்டையில் முகம் புதைத்த
என் கற்பனை நீண்டிருக்க,
பேருந்து மெல்லக் கடந்திருக்க,
அந்த இடம் கண்ணில் இருந்து
மறைந்துகொண்டே இருக்கிறது
கடைசி மணித்துளிக் காட்சியாய்...
காரிருளில் உரசிய தீக்குச்சியாய்...
பள்ளிச்சீருடையில் ஒரு சிறுவன்
துள்ளிக்கொண்டு நுழைந்தபோது
அந்தக் கதவற்ற வீட்டின்
முகவரி அறியவைத்து
பேருந்து அவ்விடத்தைக் கடந்துவிட்டிருந்தது.
குறிப்பு : தினமும் பேருந்தில் அலுவலகம் செல்லும் வழியில் காணும் காட்சியின் தொகுப்பு.
புகைப்படம் : கோவை - ஃபன் மாலில் இருந்து லிங்க் ரோடு செல்லும் வழியில்.