Wednesday, 17 February 2016

ஹைக்கூ...



மரங்களை உலுக்கினேன்
இலைகளில் கண்ணீர் !
மழை நின்றுவிட்டதாம்...

***

இலைகளுக்கு கோபம்
தாமரை மட்டும் அழகாய்ப் பூத்துவிட்டதில்...
நீருடன் ஒட்டுவதே இல்லை !

***

ரோஜாவைப் பறித்தேன்
முள் குத்திவிட்டது !
அழகிலும் உண்டு ஆபத்து...

***

கங்கை மட்டுமல்ல...
உண்மை அன்பில் வெளிப்பட்டால்
கண்ணீரும் புனிதம் தான் !

***

ஒற்றைக்காலில் தவம்
உணவிற்காக...
ஆற்றில் கொக்கு !

***

நள்ளிரவுத் தனிமையில்
நட்சத்திரங்கள் கூடத் துணையில்லை
கார்கால மேகங்களுக்கு...




[ஆண்டு 2006 - என் பள்ளிக்கால டைரியைப் புரட்டியபோது கிடைத்தவை...]

Monday, 8 February 2016

அகவை மூவொன்பது

சந்தோஷமாகத்தான்
போய்க்கொண்டிருக்கிறது
சாப்ட்வேர் எஞ்சினியராய்
அவன் வாழ்க்கை

அலுவலகம் விட்டு
வீடு வந்ததும்
அம்மாவின் வீட்டுக்கதைகளுக்கு
செவி சாய்க்கிறான்

அப்பாவுடன் சேர்ந்து
மாதக்கணக்கு பார்க்கிறான்
மளிகைக்கடைக்கு செல்கிறான்

அம்மாவையும் அப்பாவையும்
நன்றாகப் பார்த்துக்கொள்வதாய்
நம்புகிறான்

அலுவலக நண்பர்களோடு
அதிகாலை சேர்ந்துகொண்டு
ஆரோக்கியம் பேணுகிறான்

சிறுதொழில் தொடங்கும்
அவர்களின் ஆலோசனையில்
முடிவு எட்டப்படுகிறதோ இல்லையோ
அடிக்கடி பங்கேற்கிறான்

ஆண்டிராய் கற்கிறேன்
என ஆரம்பித்து
"ஹலோ வேர்ல்டு" புரோக்கிராம்
தாண்டாமல் நிற்கிறான்

இசை வாத்தியம் கற்கப் போவதாய்
இன்றுவரை
சொல்லிக்கொண்டுதான்
இருக்கிறான்

நகரச்சாலைகளை
நண்பர்களோடு
ஊர்சுற்றும் சாக்கில்
அறிந்து கொள்கிறான்

அவர்களோடு
நிறைய சினிமா பார்க்கிறான்
நெடுந்தூரம்
பைக் பயணம் மேற்கொள்கிறான்

பார்த்த படங்களையும்
படித்த புத்தகங்களையும்
நிறைய விவாதிக்கிறான்

வீடுகட்டும் ஆசை
எட்டிப்பார்த்தாலும்
வெளிநாட்டு வாய்ப்பிற்காய்
ஒத்திப்போடுகிறான்

திருமணம் ஆகிவிட்ட
தன் கல்லூரி நண்பர்களை
அடிக்கடி நலம் விசாரிக்கிறான்

சலனமற்று நகரும்
இந்த பேச்சுலர் வாழ்க்கையில்
எங்கோ விளிம்பில் நிற்பதாய்
அவ்வப்போது
உணர்த்திச் செல்கின்ற மன ஓசையில்

தொலைவில் தென்படும்
ஒரு மங்கலான
எல்லைக்கோட்டை நோக்கி
கழுத்துமுனைக் கத்தியாய்
நகர்கின்றன நாட்கள்

திடீரென
அவசரமாய் எதையாவது
சாதிக்க எண்ணுகிறது மனம்

கல்லூரி முடிந்து
ஆண்டு ஐந்து ஓடியபின்
காதல் கீதல் ஏதும் உண்டாவென
சாவகாசமாய்க் கேட்ட அக்காளிடம்

எதையோ நினைத்து
சிரித்தவனாய்
இல்லையெனத் தலையசைக்கிறான்

சரி இனியாவது
காதலித்துத் தொலைக்கலாமென்றாலும்
சாப்ட்வேருடன் பழகிய மூளை
தர்க்கமாய் யோசிக்க,
எட்டிப்பார்க்கும் காதல் கூட
சத்தமின்றி ஓடிவிடுகிறது

மனச்சுவர்களில் முட்டிமோதி
அமைதிகொள்ள முயற்சிக்கும்
அந்த முடிவில்

அப்பா கேட்கும்போதெல்லாம்
சில ஆண்டுகள் போகட்டும் என்பவன்
தவிர்க்கவியலாத மாற்றத்தை ஏற்க
பக்குவப்படத் துவங்கியவனாய்
சில மாதங்கள் போகட்டும் என்கிறான்

பனிமூடிக்கிடந்த
அந்த டிசம்பரின் ஓர் அதிகாலையில்
சத்தமின்றிப் பிறந்துவிட்டிருந்தது
அகவை மூவொன்பது

இனி
நாட்கள் எண்ணப்படக்கூடும்