Tuesday, 26 April 2016

காது கொடுப்பவர்களுக்காக மட்டும்...

கதை சொல்லப் போகிறீர்களோ?
தாராளமாய்ச் சொல்லுங்கள்

கட்டுக் கதைகளெனில்
காதோரமாய் சொல்லுங்கள்

அரசியல் கதைகளெனில்
மேடைபோட்டு சொல்லுங்கள்

வரலாற்றுக் கதைகளெனில்
வாய்வலிக்கச் சொல்லுங்கள்

திரைப்பட நாடகக் கதைகளெனில்
குழு நடுவே சொல்லுங்கள்

புத்தகத்தில் படித்த கதையெனில்
சத்தமாய் கூடச் சொல்லுங்கள்

உங்கள்
மூளையின் முடிச்சுகளிலிருந்து
வாய் வழியே வெளிப்படும்
எல்லாக் கதைகளையும்
காது படைத்த
அனைவருக்கும் சொல்லுங்கள்

உங்கள்
இதயத்தின் இடுக்குகளிலிருந்து
வாய் வழியே வெளிப்படுபவை
காது வழியே
அவர்களின் இதயத்திற்கு
கடத்தப்படவேண்டுமெனில்

காது படைத்தவர்களுக்கன்றி
உங்கள் கதைகள்
காது கொடுப்பவர்களுக்காக மட்டும்
சொல்லப்படட்டும்