ஆம்!
அவன் குற்றம் செய்துவிட்டான்!
சமூகநீதி கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.
அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்!
என்னும் வரையில்
நியாயமாகவே தென்படுகின்ற
உங்கள் புரிதல்,
அவன் தண்டிக்கப்படும் விதத்தில்
மொத்தமாய் சிதைந்துபோகிறது.
சூழ்நிலையால்
நல்லவர்களாய் அறியப்பட்ட,
தீயவர்களாய் மாற
வாய்ப்பு கிடைக்காத,
கிடைத்தால்
எந்த நேரமும் மாறிவிடக்கூடிய
நடுநிலை மனிதர்களே!
நம்முள் ஒருவன் தான்
அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறான்.
எல்லைக்கோட்டின் மீது
நின்றுகொண்டு
எல்லையைத் தாண்டியவனை
எள்ளி நகையாடும் உங்கள் பார்வை
சுய எள்ளலாகவே வெளிப்படுகிறது.
தனிமனித உரிமைகள்
வரம்பு மீறப்பட்டு
சமூகக் கட்டமைப்பு
ஆட்டம் காணும்போதெல்லாம்
அதன்
அஸ்திவாரத்தின் பிழையை உணராமல்
கட்டிடத்தின் விரிசலில்
மேற்பூச்சு பூசும்
உங்கள் மெத்தனம்,
மொத்தமாய் ஒருநாள்
கட்டிடம் சரியும்போது
உணரப்படுதலில்
யாருக்கென்ன பயன்?
எல்லைக்கு உட்பட்ட
மனிதர்களுள் இருந்து
எல்லை தாண்டியவர்களை
மொத்தமாய் தள்ளிவைப்பதில்
உங்கள் சமூகநீதி காக்கப்படுமெனில்
அதன் ஆயுள்,
எல்லை தாண்டியவர்களின்
எண்ணிக்கை
உங்களின் எண்ணிக்கையை
சமன் செய்யும் வரை மட்டுமே
என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
கம்பியிட்ட கூண்டிலிட்டு
கதைவைத் தாளிடுதலில்
காக்கப்பட வேண்டியதல்ல
உங்கள் சமூக நீதி!
அது!
கம்பியிட்ட கூண்டுகள்
காற்று மட்டுமே குடியிருப்பதாய்
மாற்றம் பெறுதலால்
காக்கப்படக்கூடியது!
நிச்சயம்
எங்கோ அடைபட்டுக் கிடக்கிறது
வேறொரு வாசல்
அது திறக்கப்படும்போது
சமூகநீதி
மொத்தமாய் காக்கப்படும்
என நம்புவோமாக...