குக்கிராமமும் அற்ற
பெருநகரமும் அற்ற
ஓர் நடுத்தர நகரத்தில்
பள்ளி பயின்று
கிராமமா
குக்கிராமமா
எனத் தெரியாத
ஓர் புதுவெளியில்
கல்லூரி சென்று
ஓர் பெருநகரத்தின் அடுக்குமாடியில்
அக்கடாவெனக் குடியேறி
தன்னை சாப்ட்வேர் எஞ்சினியராய்
அழைத்துக் கொள்ளுகிற
அந்த வாலிபனுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்புண்டு
பனங்கிழங்கு இன்னதென்று...
பள்ளியில்
கல்லூரியில்
அலுவலகத்தில்
என
எங்கேனும் எப்போதேனும்
எவரேனும் சொல்லக்
கேட்டிருக்க வாய்ப்புண்டு
பனம்பழத்தைப் புதைத்துவைத்து
வளர்ந்தபின் அகழ்ந்தெடுத்து
உப்பிட்டு வேகவைத்து
எடுத்துவந்து கொடுப்பதற்கு
ஒரு கிராமத்து நண்பன் கிடைக்கச்
சாத்தியம் உண்டு
அதை நீள்வாக்கில் பிளந்துவிட்டு
உள்ளிருக்கும் பீலி பிய்த்து
தலைப்பகுதி சுவைக்கச்சொல்லக்
கேட்டிருக்கும் நாட்களுண்டு
செய்முறை
உண்ணும் முறை
அவன் சொல்லித்
தெரிந்திருக்க வழிவகை உண்டு.
ஆனால்,
அடுக்குமாடிக் குடியிருப்பில்
அவனோடு குடியேறிய
அவன் ஓய்வு பெற்ற அப்பாவுக்கேனோ
பெயர் சரியாய் புலப்படாதபோது
நடுத்தர வர்க மனிதரெனில்
பொருளாதாரம், கல்வியோடு
வட்டார அறிவும் நடுத்தரம் தான்
என சொல்லாமல் சொல்லிக்கொண்டு
சிறுவயதில்
அந்த நடுத்தர நகரத்தின் வீதியில்
தள்ளுவண்டி கடையின்
லாந்தர் வெளிச்சத்தில்
கூறு நாலணாவுக்கு வாங்கியதாய்
நினைவென்றார்.
கப்பக்கிழங்கு
கருணைக்கிழங்கு
என்று முணுமுணுத்தார்.
குச்சிக்கிழங்கெனத்
தவறாக ஊகித்தார்.
பிறகு
அதுதானென்று வாதிட்டார்.
போராடிச் சலித்த
சாப்ட்வேர் எஞ்சினியர்
மேதாவித்தனத்தோடு
கூகுளின் துணைநாட
ஒருவழியாய்
ஒப்புக்கொண்ட மனிதர்
மெல்லமாய்க் கேட்கிறார்
"சரி குச்சிக்கிழங்கெனில்
இன்னதென்று கேள் கூகுளிடம்.."