கோவை ரயில்நிலையத்தின் நான்காவது
பிளாட்பாரத்திலிருந்து காலை ஆறேகால் மணிக்கு
கிளம்புவதற்காகத் தயாராக இருந்தது சென்னை
எக்ஸ்பிரஸ். டிக்கெட் வாங்கிய கையோடு அவசர
அவசரமாகப் படியேறி பிளாட்பாரத்தை வந்தடைந்தனர் ரகோத்தமராவும் அவரது மனைவி கமலாம்மாளும்.
நின்றுகொண்டிருந்த
ரயிலைப் பார்த்து, "ட்ரெயின் ஹொரடாக்க இன்னு மூவத்து நிம்ஷ
இத.. நிதான" என்று கன்னடத்தில் கூறிக்கொண்டே ஆவின் பால்
கடை முன் நின்றார் ரகோத்தமராவ்.
"ஹொத்தில்ல ரீ.. இவொத்து நாவு ரிசர்வ் மாடில்ல.. ந்யாபக இட்கொள்ரீ" என்று நினைவூட்டினாள் கமலாம்மாள்.
ஆனாலும், காலை ஐந்து மணிக்கெல்லாம்
அரை டம்ளர் காபி குடித்துவிட்டு
கிளம்பியதாலோ என்னவோ கமலாம்மாளுக்கு பசி
எடுத்திருக்கக்கூடும்.
"சரி தொகொண்டுட்டு ஹோகாணா" என்று கூறி பாலை
வாங்கிக்கொண்டாள். சட்டைப்பையில் இருந்த ரூபாய் நோட்டுகளில்
ஒரு அழுக்கு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார் ரகோத்தமராவ். வண்டி புறப்பட
இன்னும் சிறிது நேரமே
இருந்ததால் அங்கேயே நின்று அருந்தாமல்
இருவரும் ரயிலில் ஏறிக்கொண்டனர்.
அன்று
திங்கட்கிழமை ஆதலால் சென்னை எக்ஸ்பிரஸின்
அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் கூட்டம் சற்று குறைவாகவே
இருந்தது.
இவர்களுடன்,
தலையில் அணிந்திருந்த
பர்தாவை சரிசெய்துகொண்டே ஒரு பெண்மணி அந்த
கம்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள். பெரிய பதற்றம் ஏதுமின்றி
நிதானமாக தன் கைப்பையோடு நுழைந்து,
இருபுறமும் பார்த்துக்கொண்டே சென்றாள்.
கையில்
அழுதுகொண்டிருந்த குழந்தையை சமாதானப்படுத்தியவாறு ஒரு பெண்மணியும், அவள் அருகில் ஒரு
பெண், அநேகமாக அந்தக் குழந்தையின் தாயாகத் தான் இருக்க வேண்டும்; இரண்டு எதிரெதிர்
மேல் இருக்கையின் கம்பிகளின் இடையே குழந்தைக்கு தொட்டில் கட்டிக்கொண்டு இருந்தாள்.
அவளைச் சுற்றி அவர்களைச் சேர்ந்தவர்களாய் சில நபர்களும் அமர்ந்திருந்தனர்.
இடதுபுற
ஒற்றை இருக்கையில் ஒரு முதியவர் கையில் நாளிதழுடன் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிர்
இருக்கையில் ஒரு பை வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பையை வெளியில் இருந்து சன்னல் வழியே
பிடித்தவாறு ஒரு ஆள் தன்னை வழி அனுப்ப வந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
பாக்கி
சில்லரையை வாங்க மறந்தது சட்டென நினைவுக்கு வரவே, அவசரமாக வண்டியை விட்டு இறங்கி ஆவின்
கடையை நோக்கி நடந்தார் ரகோத்தமராவ்.
“இதே
கெலச ரீ நிம்மிக..” என்று புலம்பிக்கொண்டே நடு வண்டியில் நின்றுகொண்டிருந்தாள் கமலாம்மாள்.
இதற்கிடையில்
மேலும் முன்னேறிச் சென்ற அந்த பர்தா அணிந்த பெண்மணி மூன்றாவது வரிசையில் நான்கு பேர் அமரும் இருக்கையில் ஒரே ஒரு வட இந்திய வாலிபன் மட்டும்
அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவன் சட்டை அழுக்கேறி எண்ணெய் வடிந்த முகத்தோடு காணப்பட்டான்.
அங்கு சில இருக்கைகள் காலியாக இருப்பதை உறுதி செய்தவாறு அமர முற்பட்டபோது அந்த வாலிபன்
எதிரெதிரே உள்ள இரு இருக்கைகளையும் காட்டி “ஆயேகா ஆயேகா” என்று கத்தினான்.
அந்தப்
பெண்மணிக்கு சட்டெனக் கோபம் வந்ததில் அவனது மொழியில் வாதாடத் தெரிந்திருந்தும் “என்னடா
ஆயேகா. போடா எந்திருச்சு. இவனுங்க தொல்ல தாங்க முடியல. போங்கடா, பின்னாடி தான் ஒரு
கம்பார்ட்மெண்ட் இருக்குல்ல, அதுல போயி ஏறுங்கடா. ஒருத்தனே இத்தனை சீட்டையும் பிடிச்சு
வெச்சுகிட்டு சத்தம் வேற போடுற.” என்று தமிழில் அதட்டினாள். இறுதியில் “ஜாவ் ஜாவ்”
என்று சேர்த்துக்கொண்டாள்.
அதற்குள்
அங்கு வந்து சேர்ந்திருந்த ரகோத்தமராவும் கமலாம்மாளும் மூன்றாவது வரிசையைக் கடந்து
முன்னேறிக்கொண்டிருந்தனர். “ஏனோ ஜகள ரீ..” என்று அந்த சண்டையைப் பார்த்து பேசிக்கொண்டே
பின் தொடர்ந்த கமலாம்மாளைக் கண்டுகொள்ளாமல் இருக்கை தேடுவதில் மும்மரமாக இருந்தார்
ரகோத்தமராவ்.
அவனுக்கு
எதிர் இருக்கையில் அமர்ந்தவாறு மேலும் தொடர்ந்தாள் அந்த பர்தா அணிந்த பெண்மணி. “பொம்பளைங்க,
வயசானவங்க எல்லாம் படி ஏறி வர்றோம். இங்கயும் சீட் இல்லன்னா மறுபடியும் கடைசி கம்பார்ட்மெண்ட்
வரை நடக்க முடியுமா. இந்த ரயில்வேகாரனுங்களுக்கு கொஞ்சம் அறிவு வேண்டாம். முன்னாடி
இன்னொரு பெட்டி தான் போட்டா என்ன.”
அவள்
பேசிக்கொண்டே போனதில் ஒன்றும் புரியாதவனாய் அந்த வாலிபன் இடத்தையே காலி செய்துகொண்டு
போய்விட்டான்.
கம்பார்ட்மெண்டின்
இறுதி வரை சென்று பார்த்துவிட்டு இருக்கை ஏதும் இல்லாததால் மீண்டும் வந்த திசையில்
திரும்பிக்கொண்டிருந்தனர் ரகோத்தமராவ் தம்பதியினர். அதற்குள் சற்று கூட்டம் வர ஆரம்பித்துவிட்டிருந்ததால்
பர்தா அணிந்த பெண்மணியின் எதிரில் ஒரு இருக்கையும் அவளின் அருகில் ஒரு இருக்கையும்
மட்டும் காலியாக இருந்தது.
அவளின்
அருகில் கமலாம்மாளும் எதிரில் ரகோத்தமராவும் அமரவும் வண்டி புறப்படவும் சரியாக இருந்தது.
ரகோத்தமராவ் அமர்ந்த இருக்கையின் சன்னலோரம் ஒரு குண்டான பெண்மணி அமர்ந்திருந்ததால்
அவர் சற்று குறுக்கியே அமர நேர்ந்தது.
ஆத்திரம்
தணிந்த குரலில் “இவனுங்களுக்கு இதே வேலைங்க. நம்ம ஊருக்கு வந்து நம்ம எடத்தையே புடுச்சுக்க
பாக்குறானுங்க. மெட்ராசுல தான் இவனுங்க தொல்லைன்னா இங்கயும் வர ஆரம்பிச்சுட்டானுங்க.”
என்றவளிடம் “அடிக்கடி இந்த ட்ரெயின்ல போவீங்களா” என்று பேச்சு கொடுத்தாள் கமலாம்மாள்.
“ஆமாங்க
மா, நான் நாட்டு வைத்தியம் பாத்துட்டு இருக்கேன். அதனால அடிக்கடி மருந்து வாங்க மெட்ராசுக்கு
போவேன்” என்று விளக்கம் கொடுத்தாள் அந்த பர்தா அணிந்த பெண்மணி.
“தனியாவே
போய்டுவீங்களா” என்று ஆச்சரியத்தோடு கேட்ட கமலாம்மாளைப் பார்த்து சிரித்துக்கொண்டே
“ஆமாங்க மா.. இதுல என்ன இருக்கு. எல்லாத்துக்கும் வீட்ட எதிர்பார்க்க முடியுமா சொல்லுங்க.
நாலு எடத்துக்குப் போறோம். நாலு பேரப் பாக்குறோம். அவங்ககிட்ட பேசத் தெரிஞ்சா பத்தாதுங்களா”
என்றவள் மேலும் தொடர்ந்தாள்.
“நான்
வீட்ல இருந்து பஸ்டாண்டுக்கு கொஞ்ச தூரம் நடக்கணும். அப்புறம் இங்க வேற நாலாவது பிளாட்பாரத்துக்கு
வரணும். சீட் பிடிக்கணும்னு சீக்கிரம் வந்தா இங்க இவனுங்க வேற. இவனுங்கள எல்லாம் ஏன்
நம்ம ஊருக்குள்ள விடுறாங்கன்னே தெரியல. இவனுங்களுக்கு தமிழும் தெரியல ஒண்ணும் தெரியல.
குளிக்கறானுங்களான்னு வேற தெரியல. இவனுங்களுக்கு இடம் குடுத்தா அப்புறம் தமிழ்நாட்ல
நமக்கே இடம் இருக்காது”
பேசிக்கொண்டிருக்கும்போது
அந்த பெண்மணியின் கைப்பேசி ஒலித்தது. “பஹுன்ச்னே கி பாத் கால் கரூங்கி” என்று யாரிடமோ
பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசியதைக் கேட்டபோது ஹிந்தி போன்று இருந்தாலும் அவள் அணிந்திருந்த
பர்தாவைக்கொண்டு அது உருது என்று ஊகித்தாள் கமலாம்மாள்.
அவள்
கைப்பேசியில் பேசி முடித்தவுடன், அவள் அந்த வாலிபனைப் பற்றி பேசிய விஷயம் புரிந்தும்
புரியாமலும் ஒரு சந்தேகக் குரலில் “ஒஹோ.. ஆமாங்க, இவனுங்கள எல்லாம் உள்ள விடக்கூடாது
தான் போல” என்று ஆமோதித்தாள் கமலாம்மாள்.
எதிரில்
பாதி தூக்கத்தில் இருந்த கணவரை எழுப்பி “செல் ஃபோன் பத்தர ரீ” என்றவள், “நாங்க திருப்பூர்ல
இறங்கிடுவோம். எப்பவும் எங்க பையன் ரிசர்வ் பண்ணி குடுத்திடுவான். ஆனா இன்னைக்கி திடீர்னு
கிளம்பும்படி ஆயிடுச்சு. ஒரு பெரிய காரியம். அதனால தான் அன்ரிசர்வ்ட்லயே போகலாம்னு
வந்துட்டோம்” என்று தன்னிலை விளக்கம் அளித்துக்கொண்டிருந்தாள் கமலாம்மாள். ஆனால் அந்தப்
பெண்மணி அதை பெரிதாக சட்டை செய்ததாக தெரியவில்லை. தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்.
சற்று
நேரம் மௌனம் நிலவியதில் கமலாம்மாளுக்கு கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. இருந்தாலும்
அடுத்த சில நிமிடங்களில் இறங்க வேண்டும் என்பதால் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள்.
ரகோத்தமராவ்
அமர்ந்திருந்த வரிசையில் தூங்கிக்கொண்டிருந்த அந்த குண்டுப்பெண்மணி தூக்கத்திலிருந்து
விழித்து எதிரில் அமர்ந்து சன்னலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பர்தா அணிந்த பெண்மணியிடம்
“ஈரோடு வந்திருச்சா” என்றாள்.
“இன்னும்
இல்லெ.. திருப்பூர் தான் வரப்போகுது” என்றவள் ஏதோ பேச முற்பட்டாள். ஆனால் அதை கவனிக்காமல்
மீண்டும் தூங்கிப்போனாள் அந்த குண்டுப்பெண்மணி. எனவே மீண்டும் சன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.
அடுத்த
சில நிமிடங்களில் “யாத்ரியோங்க்ருபயா த்யான் லீஜியே” என்ற அறிவிப்புடன் திருப்பூர்
ஜங்க்ஷன் காத்துக்கொண்டிருந்தது. வண்டி நின்றதும் முன்னும் பின்னுமாக நடந்தவாறு மக்களும், இடையிடையில் தேநீர், சமோசா விற்றுக்கொண்டு
இரயில்வே ஊழியர்களும் என தினசரி நிகழ்வுகள்
நடந்த வண்ணம் இருந்த திருப்பூர் ஜங்க்ஷனின் பிளாட்பாரத்தில் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாக
கலந்தனர் ரகோத்தமராவும் கமலாம்மாளும்.
வேறு
வேறு மொழிகளைப் பேசும், இந்த இடத்தின் பூர்வீகக் குடிகளல்லாத இரு வேறு மக்கள், தமிழ்
தெரிந்த ஒரே காரணத்தினால் தமிழ் தெரியாத வேறு ஒரு மொழி பேசுபவன் மீது காட்டும் வெறுப்புணர்ச்சியை
வியந்துகொண்டும், சாதி, மதம், மொழி சார்ந்த விருப்பு வெறுப்புகள், மேல் நடுத்தர கீழ்
தட்டு மக்களைப் பொறுத்தும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பைப் பொறுத்தும் மாறுபடும் வினோதமான
போக்கைப் பார்த்தும் எதுவும் சொல்ல முடியாமல் “கூ..”வென சத்தமிட்டபடி, இன்னும் மற்ற
கம்பார்ட்மெண்ட்களில் நடக்கும் வேறு சில மனித விந்தைகளை நோட்டமிட்டபடி, அந்த
வட இந்திய வாலிபனைக் கடைசி கம்பார்ட்மெண்டில் சுமந்து கொண்டு, சன்னலோரம் மரம் பின்னோக்கி நகர்வதாய்
மாயை ஏற்படுத்தியவாறு இரயில்வண்டி தடதடக்க
ஆரம்பித்தது.
No comments:
Post a Comment